முனியப்பன் கோயில் உண்டியலில் ரூ.90 கோடி: ஆடிப்போன அறநிலையத் துறை அதிகாரிகள்; தருமபுரியில் நடந்தது என்ன?
- 29 Jun 2024 15:40:24
தருமபுரி அருகே பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு முனியப்பன் சுவாமி கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, மார்கழி நாட்களில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். இங்கு அன்னதானம் செய்வதற்காகவே கோயில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்பட்டு கோயிலில் வரவு வைக்கப்படும். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் கோயில் உண்டியல் காணிக்கை அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டுள்ளது.
அப்போது உண்டியலில் இருந்த காசோலையை கண்டு அதிகாரிகள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். அந்த காசோலையில் ரூ.90.42 கோடி (ரூ. 90,42,85,256) எனக் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது. தருமபுரி சவுச் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மகேந்திரன் என்பவர் பெயரில் அந்த காசோலை இருந்தது.
இந்த காசோலை இன்ப அதிர்ச்சி கொடுத்தாலும், அதன் உண்மைதன்மையை அறிய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகை குறிப்பிட்டு போட்டப்பட்ட காசோலை தருமபுரி பகுதியில் பேசு பொருளாகி உள்ளது. கோயிலுக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுத்த கொடை வள்ளல் யார் என்பதை அறிய பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.