திருத்தணி கோவிலில் பெண்கள் தில்லுமுல்லு
- 03 Jul 2024 16:29:30
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலுக்குள் சிக்கிய 2 பெண்களிடமும் திருவள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட போது, நூதன முறையில் 1.15 லட்சத்தை திருடிய பெண் ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி மிகவும் பிரசித்தி பெற்ற முருகனின 5-படை திருக்கோயிலாகும். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணிக்கு வருகை தந்து முருகப்பெருமானை தரிசித்து செல்வார்கள்..
காணிக்கைகள்: தங்களது நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகை, பணம் உள்ளிட்ட காணிக்கைகளையும் செலுத்திவிட்டு போவார்கள்.
பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை பிரதி மாதம் கோயில் இணை ஆணையர் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். திருக்கோயிலில் பொறுப்பு அதிகாரி இணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் 150க்கும் மேற்பட்ட திருக்கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள், திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள், ஆகியோர்கள் மலைக்கோவில் வசந்த மண்டபம் என்று சொல்லக்கூடிய தேவர் மண்டபத்தில் உண்டியல் பணியில் ஈடுபடுவார்கள்.
காணிக்கை: அந்தவகையில் நேற்றையதினமும், உண்டியல் காணிக்கையை கோயில் இணை ஆணையர் அருணாச்சலம் (பொறுப்பு) முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்த காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 7 மணிக்கு உண்டியல் எண்ணும் பணி ஆரம்பமாகியிருக்கிறது.. காலை 9.30 மணிக்கு, இரண்டு பெண்கள், உண்டியல் பணத்தை எடுத்து மறைப்பது போல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.. இதைப்பார்த்த அங்கிருந்த மற்ற ஊழியர்கள், 2 பெண்களையும் பரிசோதனை செய்தனர்.. அப்போதுதான், அவர்கள் 2 பேருமே ஆண்கள் அணியும் உள்ளாடை அணிந்து வந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளாடை: அந்த உள்ளாடைக்குள் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் 790 ரூபாய் பணம் திருடி வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடனடியாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில், திருத்தணி போலீசுக்கு புகார் செய்யப்பட்டது... போலீசாரும் விரைந்து வந்து, வழக்கு பதிவு செய்து 2 பெண்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த 2 பெண்களுமே திருத்தணி முருகன் கோயிலில் நிரந்தர பணியாளர்களாக வேலை பார்த்து வருபவர்கள்.. ஒருவர் பெயர் தேன்மொழி.. 35 வயதாகிறது.. வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த தேன்மொழி, கோயிலில் சுருதி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
வைஜெயந்தி: இன்னொருவர் பெயர் வைஜெயந்தி.. 44 வயதாகிறது.. ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.. ஆர்கே பேட்டை அருகே நாகபூண்டியை சேர்ந்தவர் வைஜெயந்தி.. இதையடுத்து, 2 பெண் ஊழியர்களையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.. திருடப்பட்ட உண்டியல் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், மீண்டும் கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைத்தனர்.
அதாவது, 2 பெண்களும், உண்டியல் பணம் எண்ணும்போது, நைஸாக பணத்தை திருடிக்கொண்டு, மலைக்கோவில் கழிவறைக்கு சென்றுள்ளார்கள்.. அங்கே தங்களது உள்ளாடையில் அந்த பணத்தை மறைத்து வைத்துக்கொண்டு, மீண்டும் உண்டியல் எண்ணும் பகுதிக்கு வந்துள்ளனர்.. அப்போதுதான் கேமராவில் சிக்கியிருக்கிறார்கள். இறுதியில் பணத்தை திருடியதை 2 பேருமே ஒப்புக் கொண்டார்கள்.
விசாரணை: இவர்கள் 2 பேருமே பணியாளர்கள் என்பதால், ஒவ்வொருமுறையும் உண்டியல் எண்ணும்போது, இவர்களும் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள.. அதனால், எத்தனை நாள் இதுபோல் உண்டியல் பணம் என்னும்போது திருடியிருக்கிறார்கள் என்பது குறித்தும் திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.