சேத்து வச்சு ஃபைனல்ல அடிப்பாரு... கோலியின் ஃபார்ம் குறித்து ரோகித் பேச்சு!
- 29 Jun 2024 15:50:17
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடருக்கான இறுதிப்போட்டி பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அரங்கேறும் நிலையில், அதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மல்லுக்கட்ட உள்ளன.
இந்நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த தொடரில் இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள அவர் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்திய அணிக்கு மிக முக்கிய போட்டியாக பார்க்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியிலும் கூட அவர் சொற்ப ரன்னில் (9 பந்தில் 9 ரன்) ஆட்டமிழந்து வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், அவரது மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி பெரிய அளவில் ரன்கள் எடுக்க விட்டாலும், இறுதிப் போட்டிக்கு அவருக்கு ஆதரவளிப்பதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “அவர் ஒரு தரமான வீரர். அதை அவரால் கடந்து வர முடியும். அவரது ஆட்டத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இது போன்ற பெரிய விளையாட்டுகளில் அவரது முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
ஃபார்ம் என்பது ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்கள் 15 வருடங்கள் கிரிக்கெட் விளையாடும்போது, ஃபார்ம் ஒரு பிரச்சனையாக இருக்காது. அவர் நன்றாக இருக்கிறார். அவரிடம் நோக்கம் இருக்கிறது, அவர் இறுதிப்போட்டிக்காக சேமித்துக்கொண்டிருக்கலாம்." என்று கேப்டன் ரோகித் கூறினார்.